ஊழல் புகாருக்கு ஆளான பஞ்சாப் மாநில உணவுத்துறை அமைச்சர் பாஜா சிங் சராரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவரது அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர் பாஜா சிங் சராரி. இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊழல் புகார் ஒன்று எழுந்தது. அதாவது ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்யது.
இந்நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பாஜா சிங் சராரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கட்சியின் உண்மையான விசுவாசியாக தொடர்ந்து நீடிப்பேன். அமைச்சர் பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். கட்சியில் ஒரு போர் வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.