இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த 30ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அந்த காரை ரிஷப் பந்தே இயக்கிச் சென்றுள்ளார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.
பின்னர் ரிஷப் பந்த் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு முழங்காலில் நேற்று நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக பிசிசிஐ வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.