அனைவரும் ஆண்டு இறுதி விடுமுறைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு பொருட்களான சிற்றுண்டிகள், சாக்லேட்டுகள், ஜெல்லிகள் ஆகியவற்றின் விற்பனையில் அதிகரிக்கும் பொருட்டும். வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதற்காகவும் அனைத்து நிறுவனங்களும் பலவித புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் மற்றொரு முறை தான் செயற்கை நிறமூட்டிகள். குழந்தைகள் உட்கொள்ளும் சாக்லேட்டுகள் முதல் பெரியவர்கள் விரும்பி உட்கொள்ளும் பலவித உணவு வகைகள் என பலவற்றிலும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவு பொருட்களின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்லாமல் அவைகளுக்கு கூடுதல் சுவையை அளிக்கின்றன. கிடைத்த தரவுகளின் படி அல்லூறா ரெட் ஏசி எனப்படும் செயற்கை நிறமூட்டிகள் உடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக உள்ளன.
செயற்கை நிறமூட்டிகளும் குடல் ஆரோக்கியமும்!
உணவுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள் நேரடியாக நமது குடலில் பாதிப்பை உண்டாக்குகின்றன. மேலும் குடலில் நடைபெறும் செரடோனின் சின்தசிஸ் என்ற ஹார்மோன் மாற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. இந்த அல்லூரா ரெட் எனப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் கேண்டி, சோடா பால் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
உணவுகளில் செயற்கை நிறமூட்டிகளில் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
கடந்த சில வருடங்களாகவே அல்லூரா ரெட் எனப்படும் செயற்கை நிறமூட்டியின் பயன்பாடு அதிகரித்துள்ளதை காண முடிகிறது. இதைப் பற்றி நடத்திய ஆய்வில் செயற்கை நிறமூட்டிகள் செரடோனின் சின்தசிஸ் மாற்றம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் குடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும் குடலை சிறிது சிறிதாக பாதித்து, அதன் இயக்கத்தை முற்றிலும் பாதிக்கும்படியான ஆபத்தும் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவுகளில் செயற்கை நிற மூட்டிகளின் பயன்பாடு :
அல்லூரா ரெட் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிறமூட்டிகள் பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் இருந்தாலும் இவற்றினால் பலவித பிரச்சனைகள் உண்டாகின்றன. இதுபோன்ற செயற்கை நிறமூட்டிகளை அதிகம் உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்ளும் போது இவை ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.
மேலும் கவனச் சிதறல் மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கின்றன. உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
சமீபத்திய ஆண்டுகளில் மனிதர்களின் ஜீன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. மேலும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் (ஐபிடி) உண்டாவதற்கும் இந்த செயற்கை நிற மூட்டிகள் காரணமாக இருக்கும் என பலர் ஆணித்தரமாக நம்புகின்றனர். இதைத்தவிர மேலை நாடுகளில் உள்ள மக்களின் உணவு பட்டியலில் கொழுப்புகள் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சர்க்கரை, நார்ச்சத்து குறைந்த உணவு பொருட்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
இவ்வாறு அவர்கள் அதிகம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் இந்த செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கண்டிப்பாக உடல் நிலையில் பிரச்சனையை உண்டாக்கும். ஆனாலும் தற்போது வரை இந்த செயற்கை நிற மூட்டிகளால் மட்டும்தான் குடலில் பிரச்சனைகள் உண்டாகின்றன என்று ஆணித்தரமாக நிறுவுவதற்கான தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை.