இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்று முன்தினம் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்து இருந்தது.
டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து நேற்று 3வது நாள் ஆட்டத்தில் ஹெட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தபோது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன்கள் முன்னிலை ஆகும். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதையடுத்து 2ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க வீரர் சாரெல் எர்வீ 21 ரன்களிலும், கேப்டன் டீன் எல்கர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் டி ப்ரூன் 28 ரன்களும், பவுமான 65 ரன்களும் எடுத்தனர்.
விக்கெட் கீப்பர் கீல் வெரேன் 33 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 68.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2ஆவது இன்னிங்ஸில் நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலன்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகும்.