233
ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.
விளக்கம்:
பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்து ஆறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன் தன்னை போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னை கொண்டு வந்து உறுதியாக என்னை சிவப் பரம்பொருளாகவே ஆக்கி அளவில்லாத தம்முடைய அன்பினால் இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி என்னை தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார் குருநாதராக வந்த இறைவன்.