கொரோனாவால் கடந்த ஆண்டுகளில் முடங்கி கிடந்த உலகம் இந்த 2022ம் ஆண்டில் சிறப்பாகவே இயங்கியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த பல்வேறு சம்பவங்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தன. அப்படியான சம்பவங்கள் குறித்து சுருக்கமாக..
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. இதனால் ஏராளமான மக்களும், இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். உலக பொருளாதாரத்திலும் உக்ரைன் மீதான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வழக்கம்போல இந்த ஆண்டும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. அபாயகரமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா சில ஏவுகணைகளை தென்கொரிய எல்லை கடல்பகுதியில் வீசியதால் பரபரப்பு எழுந்தது. ஜப்பானின் தீவுகள் பக்கமும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளுக்கு ஜப்பான் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.