கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்படும் பப்புகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.