கிறிஸ்துமஸ் தரும் ஆத்ம சிந்தனை

by Editor News

உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.

உலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.

இதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.

ஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.

இறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்பட்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

சரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது? என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.

எனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார். அதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.

செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு. எனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது. ஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.

மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். முதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன. இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை.

எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை. நாமும் இதே பாதையில் செல்கிறோமா? ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா? இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா? மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா? அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன? இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம்? தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.

Related Posts

Leave a Comment