கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், சந்தோம் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள் மின் விளக்கு அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டுத் தொழுகையில் குழந்தை இயேசு பிறப்பை தெரிவிக்கும் வகையில், குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அந்தவகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெசன்ட் நகர் தேவாலயத்தில் நேற்று இரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் கொரோனா தொற்றுக்கு பிறகு மீண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது 500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் , உலகப் புகழ்பெற்ற சென்னை சாந்தோம் புனித தோமையார் தேவாலயத்தில் கிறிஸ்து இயேசு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. அங்கு இரவு 9.30 மணிக்கு ஆங்கில மொழியிலும், இரவு 11.30 மணிக்கு தமிழ் மொழியில் சிறப்பு ஆராதனை நடந்தது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பிரார்த்தனைக்காக இந்த தேவாலயத்திற்கு வந்தனர். தொடர்ந்து புத்தாடைகள் உடுத்தி, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கிறிஸ்துமஸ் நன்நாளை கொண்டாடி வருகின்றனர்.