“நம்ம ஸ்கூல்” “நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை” கொச்சைப்படுத்துவதா?” ஈபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் ..

by Editor News

“அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் “நம்ம ஸ்கூல்” “நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை” கொச்சைப்படுத்துவதா?” ஆதாரமற்ற அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும், கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள “நம்ம ஸ்கூல்” என்னும் “நம்ம ஊர்ப் பள்ளி திட்டத்திற்கு” ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் விடுத்திருக்கும் அர்த்தமற்ற அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் இலட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது. சமூகநீதி, உள்ளடக்கிய கல்வி. பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப் பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு உறுதிபூண்டு, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அண்மையில் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் – நம்ம ஊர்ப் பள்ளி” போன்ற ஒரு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை ஏன் போலியானவை என்றே கூறிட விரும்புகிறேன். எல்லாவற்றையும் விட, அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் தி.மு.க. அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, இதோ துறை அமைச்சர் என்ற முறையில் எனது பதில்கள்!

கேள்வி: முந்தைய அரசு சி.எஸ்.ஆர். பங்களிப்புகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணைய தளத்தை உருவாக்கியதா?
பதில்: முந்தைய அரசு இணைய தளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் – அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக் கல்வித் துறைக்கு/பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழகமே பெற்றுக் கொண்டது. இக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறையோ அதி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட வில்லை; அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையோ! ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அத்திட்டம் மிகப் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது. இவ்வளவு குறைபாடுகளுடன் கூடிய ஒன்றைத் தொட இயனது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு இருந்தது. தி.மு.க. அரசில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம் சி.எஸ்.ஆர். மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாது. முன்னாள் மாணவர்கள் – புரவலர்கள் – தனிநபர்கள் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையிலும் நிதித் துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக் கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கெளரவத் தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன.

கேள்வி: நிதி பெறும் முயற்சிகள் மூலமாக முந்தைய அ.இ.அ.தி.மு.க அரசு 84 கோடி வரை நிதியுதவியைப் பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா? பதில்: 2017-இல் தொடங்கியதாகக் கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி, வட்டியுடன் சேர்த்து, ரூபாய் 9.78.416 மட்டுமே. இந்தத் தொகை M/S TNSPTA CSR Fund என்கிற பெயரிலிருந்த பொது சேமிப்புக் கணக்கில் சேர்ந்துள்ளது. எனவே 84 கோடி ரூபாய் நிதி சேர்ந்தாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது, அப்பட்டமான பொய்! அந்த 84 கோடி ரூபாய் எங்கே என்பதை அரசு பொறுப்பில் அப்போது இருந்த திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கேள்வி: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதா?
பதில்: நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும். ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும். இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும், திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும். பரப்புரைக்காகவும். தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆகவே ஒரே நாளில் 3 கோடி ரூபாய் செலவு என்பது அரைவேக்காட்டுத் தகவல். சமத்துவம், ஜனநாயகமான வழிமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளியின் ஒட்டுமொத்த அணுகுமுறை, பொது மனசாட்சியைத் தட்டி எழுப்பி தரமான பள்ளிக் கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களைப் பள்ளிகளின்பால் அதிக உரிமை எடுக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி இது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் பங்களிப்பதற்கான அணிதிரட்டலையும் உருவாக்கும்பொருட்டு. மாவட்டம் வட்டாரம் ஊராட்சி அளவிலான பல்வேறு பரப்புரைகளின் விளைவாகக் கொண்டுவரப் பட்டதே இத்திட்டம். தொடக்க விழா நடந்த டிசம்பர் 19, 2022 அன்று மட்டும் 50.84 கோடி ரூபாய் அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது என்பது இத்திட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று.

எனவே இத்திட்டம் குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்ற அபாண்டமான பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு திராவிட மாடல் ஆட்சியில் வலுப்பட்டுவிடக் கூடாது, மாணவ – மாணவிகள் பயன்பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் செயல்படுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment