பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்பட்ட வரி விலக்குகளை அரசாங்கம் மீளாய்வு செய்து வருகிறது.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பில சேனாநாயக்க இதனை தெரிவித்தார்.
செப்டம்பர் முதலாம் திகதி முதல் வட் வரியை 15 சதவீதமாக அரசாங்கம் உயர்த்திய நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டட துறைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டது.
இந்நிலையில் வட் வரியின் திறனுக்கும் செயற்திறனுக்கும் இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6 வீதமான பரந்த இடைவெளி இருப்பதாக உலக வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டி கலாநிதி சேனநாயக்க சுட்டிக்காட்டினார்.
மேலும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய VAT விலக்குகளை நீக்குவதன் மூலம் அரசாங்கம் குறைந்தபட்சம் 200 பில்லியன் ரூபாயை சேகரிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள், கடல் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்படாத இறால்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வட் வரி விலக்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.