அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக வருகிற 24ம் தேதி கோவைக்குச் செல்ல இருக்கிறார்.
தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் , ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தான் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர், கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிமாவட்ட சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு கோவைக்குச் செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் அன்றைய தினம் கோவையில் தங்கும் அவர், 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஓடுதள பாதையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலையில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகை தரவுள்ளது, அம்மாவட்ட தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.