95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் போட்டியிடும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட இந்தியர்கள் பிற நாட்டு படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.
சமீபகாலமாக இந்திய படங்கள் அதிகளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானாலும், இறுதிப்போட்டியில் அவை தோற்று விடுகின்றன. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் இறுதிவரை சென்று ஆஸ்கர் வாய்ப்பை நழுவவிட்டன. இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது .
இதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து என்கிற பாடல் இடம்பெற்று உள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 81 பாடல்கள் போட்டியிட்டன. அதில் இருந்து அடுத்த லெவலுக்கு தேர்வாகி உள்ள 15 பாடல்களில் நாட்டு கூத்து பாடலும் ஒன்று.
அதேபோல் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் 92 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில் இருந்து 15 படங்கள் இறுதிச் சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறும். அந்த 15 படங்களில் குஜராத்தி படமான செல்லோ ஷோவும் (Last Film Show) தேர்வாகி உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.