கடந்த இரண்டு நாட்களாக யமுனா நகரை மூடுபனி சூழ்ந்துக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் கடும் மூடுபனி காரணமாக அம்பாலா-யமுனாநகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 12 வாகனங்கள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
விடுமுறை தினமான நேற்று அம்பாலா நெடுஞ்சாலை பகுதியில் வாகனங்களின் போக்குவரத்து சற்று அதிகளவு காணப்பட்டுள்ளது. அந்நெடுஞ்சாலையில் சுமார் 10 முதல் 15 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது என தகவல் கிடைத்ததாக போக்குவரத்து காவல் அதிகாரி லோகேஷ் ராணா கூறினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் அதிகாரிகள் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டதுடன், சேதமடைந்த வாகனங்களையும் கிரேன்கள் மூலம் மீட்டனர். குறிப்பாக, காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பிவைத்தனர்.
மேலும், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சீரமைத்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கடும் மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்து காரணமாக நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சிரமப்பட்டு வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக யமுனா நகரை மூடுபனி சூழ்ந்துக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தையும் இடையூரையும் ஏற்படுத்தி வருகிறது. கடும் பனி இன்னும் சில தினங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சாலைப் பயணிகள் கடும் அச்சத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
கடும் மூடுபனிக்கு மத்தியில் வாகனம் ஓட்டும்போது, டிப்பர்கள் (dippers) மற்றும் ஃபாக் விளக்குகளை (fog lights) இயக்குமாறு ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவல் அதிகாரி லோகேஷ் ராணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.