பேராசிரியர் நூற்றாண்டு வளைவு திறப்பு.. டிபிஐ வளாகத்திற்கு ‘அன்பழகனார் பெயர்’ – முதல்வர் மரியாதை ..

by Editor News

பேராசிரியர் க.அன்பழகனாரின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்து , மரியாதை செலுத்தினார்.

மறைந்த பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவாக சென்னையில் உள்ள பள்ளி கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகத்திற்கு ‘அன்பழகனார் வளாகம்’ என பெயர்ச்சூட்டி அங்கு நூற்றாண்டு நினைவு வளைவையும் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். பேராசரியர் க. அன்பழகன் முன்னாள் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறார். கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும், பல முக்கிய முடிவுகளையும் முன்னெடுத்த பங்கு அவருக்கு உண்டு.

இன்றைய தினம் பேராசிரியரின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலக வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அங்கு பேராசிரியரின் முழு உருவச்சலை நிறுவும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவுபெறும் என்று நேற்றைய தினம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது முதல் கட்டமாக க.அன்பழகனார் நூற்றாண்டு நினைவு வளைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து அன்பழகனார் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்ரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வா.வேலு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்று, அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Posts

Leave a Comment