திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். இன்று திருபாவை, திருவெம்பாவையில் இருந்து 4-வது பாடலையும் அதற்கான விளக்கங்களையும் பற்றி இங்கு தெரிந்துக் கொள்ளலாம் .
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும்… இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்…
திருப்பாவை பாடல் – 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது…
திருவெம்பாவை பாடல் – 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பொருள்:
ஒளியையுடைய முத்துப் போன்ற பல்லினை உடையாய்! இன்னும் உனக்குப் பொழுது விடியவில்லையா?. அழகிய கிளியின் சொல்லின் இனிமை போன்ற சொல்லினை உடைய தோழியர், எல்லோரும் வந்து விட்டார்களோ? எண்ணிக் கொண்டு, உள்ளபடியே சொல்லுவோம்; ஆனால், அத்துணைக் காலமும் நீ கண்ணுறங்கி வீணே காலத்தைக் கழிக்காதே. தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் போல்வானை, அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேதத்தில் சொல்லப்படுகின்ற மேலான பொருளானவனை, கண்ணுக்கு இனிய காட்சி தருவானைப் புகழ்ந்து பாடி, மனம் குழைந்து உள்ளே நெகிழ்ந்து நின்று உருகுவதன் பொருட்டு நாங்கள் எண்ணிச் சொல்லமாட்டோம். நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் போய்த் தூங்குவாயாக.