பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும்.
தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும். ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.
ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும். வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும். ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.
ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும். பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும். ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.