விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி இருந்தாலும், அந்நிறுவனம் ரெட் ஜெயண்ட்டிடம் சில ஏரியாக்களை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த ஓராண்டாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் என்றால் அது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான். படங்கள் தயாரிப்பதைக் காட்டிலும், அதனை வாங்கி வெளியீடு செய்வதில் தான் தற்போது அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ரிலீசான பெரிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை உதயநிதி தான் வெளியிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி தான் இவ்வாறு படங்களை கைப்பற்றி வருவதாக சர்ச்சை எழுந்தது. அதெல்லாம் வெறும் வதந்தி என ஓப்பனாகவே பேட்டி அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் உதயநிதி. தற்போது அவர் அமைச்சராகிவிட்டதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தாலும், படங்களை தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதன்படி உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் அடுத்ததாக வெளியிட உள்ள பெரிய படம் என்றால் அஜித்தின் துணிவு தான். இப்படத்துக்கு போட்டியாக ரிலீசாக உள்ள விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி இருந்தது. இருந்தாலும், அந்நிறுவனம் ரெட் ஜெயண்ட்டிடம் சில ஏரியாக்களை கொடுக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது.
தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஏரியாக்களில் விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக செவன் ஸ்கிரீன் நிறுவனமே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.