ஆவின் நிறுவனம் நெய் விலை உயர்வு ..

by Editor News

ஆவின் நிறுவனம் நெய் விலையை உயர்த்தியுள்ளதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50.00ரூபாய் உயர்த்துவதாக (ஒரு லிட்டர் 580.00லிருந்து 630.00ரூபாய்) நேற்றைய தினம் (15ம் தேதி) இணையத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கும், ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், சபரிமலை ஐயப்பன் சாமி பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வை இன்று (16ம் தேதி) முதல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த அதிர்ச்சியை மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் அதுவும் நடப்பாண்டில் கடந்த 9மாதங்களில் நடைபெறும் மூன்றாவது விலையேற்றமாகும் இது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி 515.00ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் 535.00ரூபாயாகவும், ஜூலை 21ம் தேதி 535.00ரூபாயில் இருந்து 580.00ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாய் என கடந்த 9மாதங்களில் மட்டும் ஒரு லிட்டர் நெய்க்கு (20.00+45.00+50.00) 115.00ரூபாய் என இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத வகையில் நெய் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் விரோத செயலன்றி வேறில்லை என்பதால் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் இந்த ஆவின் நெய் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment