இந்திய அணி வென்ற U-19 உலகக் கோப்பை, சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை இரண்டிலும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற தனித்துவமான பெருமை யுவாரஜ்க்கு மட்டுமே உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்கள் பெயர்களில் பட்டியலிட்டால், அதில் யுவராஜ் சிங்கின் பெயர் நிச்சயம் இடம்பெறும். காரணம், தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் பல மகத்தான வெற்றிக்கு வித்திட்டவர் யுவராஜ் சிங். குறிப்பாக சிக்சர் கிங் என்று 90ஸ் கிட்ஸ்களால் அறியப்படும் யுவராஜ் சிங் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை ஒருநாள் இரு உலகக் கோப்பைகள் வெல்வதற்கு பிரதான பங்காற்றியவர்.
2000ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பையை வென்றது முகமது கைப் தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் தொடர் நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதே ஆண்டே கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 84 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இவரின் முதல் ஒருநாள் அரைசதம் இதுவே. பின்னர் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் தொடர் யுவராஜின் சர்வதேச கேரியரில் திருப்புமுனையாக இருந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் இவரும் முகமது கைப்பும் 121 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடித்தந்தனர்.
இதன் பின்னர் இந்திய அணியில் கவனிக்கத்தக்க வீரராக உருவெடுத்த யுவராஜ் சிங்கின் பார்ம் ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது.2005-07 காலக்கட்டம் தான் யுவராஜ் சிங் இந்திய ஒரு நாள் அணியின் முக்கிய மிட்டில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த காலம். இந்த காலக்கட்சத்தில் பல்வேறு சிறப்பான நாக்குகளை ஆடி பல தொடர் நாயகன் விருதை யுவராஜ் வென்றார். 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. யாரும் எதிர்பாராத விதமாக மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இளம் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியது.
இந்த உலகக்கோப்பை போட்டியில் தான் இங்கிலாந்து வீரர் பிராட்டுக்கு எதிராக ஒரே ஓவரின் 6 பால்களிலும் 6 சிக்ஸ் அடித்து மறக்கமுடியாத இன்னிங்ஸை தந்தார் யுவராஜ் சிங். இந்த போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார் யுவராஜ். சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக அடிக்கப்பட்ட அரைசதம் என்ற சாதனை இன்றுவரை தொடர்கிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் சிக்சர் கிங்காக யுவராஜ் சிங் வலம் வரத்தொடங்கினார்.
2011ஆம் ஆண்டில் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்றது. சச்சினின் உலக்கோப்பை கனவை நனவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. இந்த தொடரில் தான் யுவராஜ் சிங்கை அணியின் பிரதான ஆல்ரவுண்டராக பயன்படுத்தினார் கேப்டன் தோனி. பெரும்பாலான போட்டிகளில் மிட்டில் ஓவர்களில் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக யுவராஜை சாமர்த்தியமாக பயன்படுத்தினார் தோனி. அதேபோல், குரூப் போட்டிகளில் பேட்டிங்கிலும் தொடர்ந்து அசத்திய யுவராஜ் சிங் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் அடித்தார்.
இந்திய அணி தனது காலிறுதிப்போட்டியில் அன்றைய சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்தோடு மட்டுமில்லாமல், சேசிங்கில் 57 ரன்களை எடுத்து சாம்பியானான ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்து வீட்டிற்கு அனுப்பினார் யுவராஜ் சிங். இந்த நாக்கும் யுவராஜ் கேரியரில் மறக்கமுடியாத இன்னிங்ஸ்சாகும். இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வென்று சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
2011 உலகக் கோப்பை தொடரில் 362 ரன்கள், 15 விக்கெட்டுகள் எடுத்து தலைசிறந்த ஆல்ரவுண்ட் பெர்பார்மென்ஸ் செய்த யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய அணி வென்ற U-19 உலகக் கோப்பை, சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை இரண்டிலும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற தனித்துவமான பெருமை யுவாரஜ்ஜிற்கு மட்டுமே உள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் சிக்சர் கிங் யுவராஜ் சிங்கின் 40ஆவது பிறந்த தினம் இன்று.