மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக தமிழக எல்லையான வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசால் கட்டப்பட்ட 12 அடி உயர தடுப்பணையை தாண்டி அதிகளவு தண்ணீர் வெளியேறியது. இதே போல நாராயணபுரம் பகுதி, மண்ணாற்றிலும் அதிகளவு உபரி நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் உள்ள பாலாற்று தரைப்பாலத்தின் அனைத்து கண்மாய்கள் வழியாகவும் வெள்ள நீர் வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் பச்சை குப்பம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது . தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பாதுகாப்புக் கருதி ஆம்பூர் – குடியாத்தம் செல்லும் வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.