சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் குவிவதால் தேவசம்போர்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல்நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறதே தவிர, குறையவில்லை. கடந்த மாதம் தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த மண்டல காலத்திலேயே அதிகபட்சமாக கடந்த 9ம் தேதி தான் மிக அதிகமாக 1,10,000 மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். அதன் தொடர்ச்சியாக நேற்று 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசித்துள்ளனர். அத்துடன் வருகிற 12ம் தேதி தரிசனத்திற்காக இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை சபரிமலையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாள்தோறும் 10 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மண்டல பூஜை நெருங்கி வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் சாமி தரிசனத்திற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் , தற்போது இரவு 11. 30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.