வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடி வருகிறார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார் . அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷான்126 பந்துகளில் இரட்டைசதமடித்து அசத்தினார்.இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின் ,ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டைசதமடித்து இஷான் கிஷான் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆடிய அவர் 131 பந்துகளில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதேபோல் விராட் கோலியும் தன் பங்கிற்கு சதம் அடித்தார். இது அவருக்கு 72வது சர்வதேச சதம் ஆகும். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது.