மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் பெய்த கனமழையினால் சென்னை அண்ணா சாலை , திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை, வடபழனி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் மழையினால் இருள் சூழ்ந்திருக்கிறது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. சென்னையில் மாநகராட்சி சார்பில் 5 முகாம்களில் 318 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்களில் 1560 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 860 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடுகலுர், அலம்பறை குப்பம், கானாத்தூர், மடையம்பாக்கம், கோட்டைகாடு, மாமல்லபுரம் கொக்கிலமேடு, புளிக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 சிறப்பு முகாம்களில் 367 பேர் தங்கி உள்ளனர்.