சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ரீ-எண்ட்ரியை அறிவித்த பின் அவர் முதன்முதலில் நடிக்க கமிட் ஆன படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் வடிவேலு.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு உடன் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “படத்தின் பாசிடிவ் வடிவேலு, பின்னணி இசை, பாடல்கள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் காமெடி காட்சிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர், வடிவேலுவை தவிர மற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் இயக்கம் படத்திற்கு மைனஸாக அமைந்ததாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு படம் முழுக்க வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகள் என்ஜாய் பண்ணி பார்க்கும் படம் இது. வடிவேலுவின் விண்டேஜ் காமெடிகளை படத்தில் கொண்டுவர முயற்சித்துள்ளார் இயக்குனர் சுராஜ். ஆனால் அது எதிர்பார்த்த அளவு ஒர்க் அவுட் ஆகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு டுவிட்டில், “வடிவேலு தலைவா, உங்களுக்கான கம்பேக் இதுவல்ல, தலைவரின் இண்ட்ரோ அருமை. ஆனந்தராஜ் மற்றும் முனீஸ்காந்த் செய்யும் காமெடிகளை தவிர இதர நடிகர்களின் காமெடிகள் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வடிவேலுவுக்கு இன்னும் நல்ல படம் கிடைத்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
இதுதவிர படம் பார்த்த ரசிகர்கள் ஏராளமானோர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே பதிவிடுகின்றனர். இதன்மூலம் வடிவேலுவுக்கு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் கம்பேக் திரைப்படமாக அமையவில்லை என்பது தெரிகிறது.