இமாச்சலபிரதேச முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜெய்ராம் தாகூர் ..!

by Editor News

இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் பதவியை ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. அதுபோலவே கடும் போட்டி நிலவி வந்தது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பாஜக 25( ஒரு தொகுதியில் வெற்றி) தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவையான 35 தொகுதிகளையும் தாண்டி காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment