குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து வருகிற திங்கள் கிழமை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த ஒன்றாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜக தற்போது 140 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் குஜராத்தில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், மேள தாளங்களை இசைத்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி பதவியேற்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. வருகிற திங்கள் கிழமையில் பதவியேற்பு விழா நடைபெறும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.