மாண்டஸ் புயலின் காரணமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருக்கிறது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையும் என்று தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
மேலும் , புயல் உருவாகும் பட்சத்தில் அந்த மாண்டஸ் புயல் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்றும் ராணிப்பேட்டை , காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை , திருவாரூர், ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும் பெய்யவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயலின் காரணமாக தென்மேற்கு வங்க கடல் பகுதி நாளை மற்றும் நாளை மறுதினம் மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் தமிழகம், புதுச்சேரி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளையும் நாளை மறுதினமும் அதற்கு அடுத்த தினமும் மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.