திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)
தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டு
வானச் சொரூபங் கணான்கு மகன்றற
வேனைய முத்திரை யீறாண்ட னனந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
விளக்கம்:
அடியவருக்கு இறைவன் தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார். அப்போது இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில் அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கி விட மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே முத்திரையாக (ரூபம்) வைத்து அதையே தமக்கு எல்லையாக கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன். அந்த குருநாதனாகிய இறைவன் தமது திருவடியை அடியவரின் தலை மேல் பாடல் #1590 இல் உள்ளபடி முன்னரே கிரீடமாக சூட்டி அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது பேருண்மையே ஆகும்.
பஞ்ச கோசங்கள்:
1. அன்னமய கோசம் = உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிற உடல்.
2. பிராணமய கோசம் = மூச்சாக உள் வந்து உடலின் அனைத்து இயக்கங்களையும் செயல் படுத்துகின்ற காற்று.
3. மனோமய கோசம் = எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஆதாரமாக இருக்கின்ற மனம்.
4. விஞ்ஞானமய கோசம் = பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் கொண்டு இருக்கின்ற அறிவு.
5. ஆனந்தமய கோசம் = புலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற பேரின்பம்.