வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் வசந்தத்தை தந்த புரட்சித் தலைவி அம்மா நினைவுநாளில் அவர் எண்ணிய சிந்தனையை செயல்படுத்த உறுதியேற்போம் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த 2016 ஆம் ஆண்டில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதேநாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்படி ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 9:30 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலை 10:30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்துகிறார் . இதன்பின்னர் சசிகலா காலை 11 மணிக்கும், அதை அடுத்து டிடிவி தினகரன் 11.30 மணிக்கும் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஜெயலலிதா நினைவுநாளினை முன்னிட்டு, ‘’உண்மையான அன்பு, அயராத உழைப்பு, வல்லமைமிக்க செயல்கள், மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகள் என வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் வசந்தத்தை தந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவுநாளில் அவர் எண்ணிய சிந்தனையை செயல்படுத்த உறுதியேற்போம்’’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.