பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை அறிவித்தார்.
இந்த விழாவின் போது வில்லியம் மற்றும் கேத்தரின் ஐந்து வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
அவர்களுடன் பில்லி எலிஷ், அன்னி லெனாக்ஸ், எல்லி கோல்டிங், சோலி எக்ஸ் ஹாலே மற்றும் டேவிட் பெக்காம் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
கென்யா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இளவரசர் வில்லியம், சர் டேவிட் அட்டன்பரோ, நடிகை கேட் பிளான்செட், கால்பந்தாட்ட வீரர் டானி ஆல்வ்ஸ், ஃபிஜியன் ஆர்வலர் எர்னஸ்ட் கிப்சன் மற்றும் பாடகி ஷகிரா ஆகியோர் அடங்கிய குழு 15 இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலிலிருந்து இந்த ஆண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.
இந்த விழாவில் உரையாற்றிய இளவரசர் வில்லியம், ‘நீங்கள் பார்த்த எர்த்ஷாட் தீர்வுகள் மூலம் நமது கிரகத்தின் மிகப்பெரிய சவால்களை நாம் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்களை ஆதரிப்பதன் மூலமும் அளவிடுவதன் மூலமும் நம் எதிர்காலத்தை மாற்ற முடியும்’ என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு விருதுகள் இளவரசர் வில்லியம் அவர்களால் கிரகத்தை காப்பாற்றும் திட்டங்களுக்கு நிதியளிக்க உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட முதல் விருதுகளுக்குப் பிறகு, வழங்கப்படும் எர்த்ஷாட் விருதுகளின் இரண்டாவது தொகுப்பு இதுவாகும். விருதின் பெயர் 1960களின் அமெரிக்காவின் ‘மூன்ஷாட்’ லட்சியத்தைக் குறிக்கிறது.
எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு ஆதரவாக 2030ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் பவுண்டுகள் ஐந்து எர்த்ஷாட் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு விருதுகளுக்கான பரிந்துரைகள் டிசம்பர் 5ஆம் திகதி திறக்கப்படும்.