உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உலக நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரங்களுக்கு மிருகங்களின் கண்கள் அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 10 மாதங்களை கடந்து விட்ட நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் இரு நாட்டு ராணுவத்திலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக உக்ரைனை விட்டு வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதேசமயம் உக்ரைனும் நேட்டோ நாடுகளின் ஆதரவுடன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில் மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் ஒன்று வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உக்ரைன் தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், மோப்ப நாய்கள் வைத்து சோதனையும் செய்யப்பட்டது.
மாட்ரிடில் மட்டுமல்லாமல் ஹங்கேரி, போலந்து, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களும் இம்மாதிரியான விலங்குகளின் கண்கள் கொண்ட பார்சல் வந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தூதரகங்களை மிரட்டும் வகையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.