சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற உள்ளது.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூர் அருகே உள்ள முண்டோட்டா என்கிற 450 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது. அந்த அரண்மனையின் சிறப்புகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
450 ஆண்டுகால பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடர் அருகே எழில்கொஞ்சும் அழகுடன் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இந்த அரண்மனை 1550-ம் ஆண்டு முகலாய மன்னர் அக்பரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
5,000 மக்கள் தொகை கொண்ட முண்டோடா என்கிற கிராமத்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளதால், அதற்கும் அதே பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அரண்மனையை காண ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்களாம். சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரண்மனை தற்போது 5 ஸ்டார் ஓட்டலை போல் அற்புதமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் 11 அறைகள் உள்ளன. இதுதவிர ஏராளமான ஓய்வறைகளும் இருக்கின்றன. மேலும் நிகழ்ச்சிகள் நடத்த தனி இடங்களும் உள்ளன. ராஜபுத்திர மன்னர்களின் தலைமுறையினரால் இந்த அரண்மனை பராமரிக்கப்பட்டு வருகிறது. ராஜபுத்திர மன்னர்களின் வீரத்தையும், அவர்களின் மகத்துவத்தையும் போற்றும் வண்ணம் பல்வேறு கல்வெட்டுகளை இந்த அரண்மனையில் காணலாம்.
முண்டோடா கிராமத்தின் வழியாக தான் அங்குள்ள அரண்மனைக்கு செல்ல முடியுமாம். குறிப்பாக இந்த கிராமத்தின் நுழைவு வாயில் பைரவ பாபா கோவில் ஒன்று உள்ளதாம். இங்கு வரும் மக்கள் இந்த கோவிலை வழிபடாமல் செல்ல மாட்டார்களாம். இந்த கோவிலில் வழிபடாமல் சென்றால் எந்த வேலையும் நடக்காது என அந்த கிராம மக்கள் நம்புகின்றனர்.