பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவன அதிபர் முரளிதரன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்பே சிவம், பகவதி, உன்னை நினைத்து, புதுப்பேட்டை உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’. இந்த தயாரிப்பு நிறுவன அதிபரான முரளிதரன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே அவர் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முரளிதரனின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்த்யில் தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு. கே. முரளிதரன் (66) அவர்கள் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். வெற்றிப்படங்களைத் தயாரித்து90’கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள – தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட திரு. கே. முரளிதரன் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டார். மூத்த தயாரிப்பாளரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.