இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணியாளர் போட்டித் தேர்வும், தமிழக பல்கலைக்கழகத் தேர்வும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி டுவிட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘’இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் திசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன!
2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்!
அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் திசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.