பரத், கோபிகா, நாசர், சரண்யா, வைகை புயல் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘எம் மகன்’ படத்தையும் திருமுருகன் இயக்கியுள்ளார்.
‘மெட்டி ஒலி’ புகழ் திருமுருகனின் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த சீரியல் இயக்கப்படுவதாக தெரிகிறது.
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘மெட்டி ஒலி கோபி’ என்ற பெயரில் தமிழக மக்களுக்கு பரிச்சயமானவர் திருமுருகன். மெட்டி ஒலி சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜ்காந்த், சேத்தன், சஞ்சீவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதனை திருமுருகன் இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் பிரபலமான இந்த சீரியல் ஏப்ரல் 8, 2002 முதல் அக்டோபர் 14, 2005 வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலின் மறு ஒளிபரப்பையும் ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.
அதோடு, பரத், கோபிகா, நாசர், சரண்யா, வைகை புயல் வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘எம் மகன்’ படத்தையும் திருமுருகன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு முதலில் எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டு பின்னர் எம் மகன் என மாற்றப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை ருசித்த இப்படம், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் வென்றது.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற மற்றொரு படத்தையும் இயக்கினார். ஆனால் இது பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற தொடர்களை தொடர்ந்து இயக்கினார் திருமுருகன். தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறார்.