முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இ-நாணயம் எனப்படும் டிஜிட்டல் கரன்சி இந்தியாவில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் புழங்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதனை பரிட்சார்த்த முறையில் டிசம்பர் முதல் தேதி முதல் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, IDFC வங்கி ஆகிய நான்கு வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகின்றன. பின்னர் பாங் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, HDFC மற்றும் கோட்டக் மகிந்திரா வங்கிகள் இ-நாணயத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.
முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக அகமதாபாத், கேங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா நகரங்களில் வெளியிடப்படும்.
ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சியானது, மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக, மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் கரன்சியாக இருக்கும். டிஜிட்டல் கரன்சி காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும். இது வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமாகும்.
டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்கும். முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும் இருக்கும். டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்.
கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன்மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்கள் உறவினர்களுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிப்பவர்களுக்கோ பணத்தை அனுப்பலாம்.
தற்போது நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன
விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் 27 உறுப்பு நாடுகளில் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.