கால்பந்து உலகக் கோப்பை: பரபரப்பு போட்டி.. நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, அமெரிக்கா ..!

by Editor News

கடைசி வரை போராடியும் ஈரான் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளன.

‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இங்கிலாந்து அணி, தனது கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியுடன் மோதியது. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி சமநிலையை எட்டியது. ஆனால், இரண்டாவது பாதியில் 50-வது நிமிடத்தில் வேல்ஸ் பெனால்டி பாக்ஸ் அருகே கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில், இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட், மிரட்டலான கோல் ஒன்றை பதிவு செய்து அசத்தினார்.

அத்துடன், இங்கிலாந்து அடுத்தடுத்து கோல் அடித்து மூன்றுக்கு பூஜ்ஜியம் என வேல்ஸ் அணியை வீழ்த்தி, தொடரில் இருந்து வெளியேற்றியது. ‘பி’ பிரிவில் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் அமெரிக்கா – ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், 38-வது நிமிடத்தியில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக், லாவகமாக கோல் அடித்து, தனது அணிக்கு வலு சேர்த்தார்.

கடைசி வரை போராடியும் ஈரான் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றிபெற்றது. அத்துடன், ஒரு வெற்றி, இரண்டு டிராவுடன் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியது.

Related Posts

Leave a Comment