ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், அதற்கு இந்த விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜோசப் , அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய அமர்வில் கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது .
அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லி பீட்டா சார்பில் சிறப்பு புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. உடனே, பீட்டா தரப்பில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் எதார்த்தத்திற்கு முற்றிலும் முரணாகவே உள்ளன என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பீட்டா அளித்த அந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர். மேலும், புகைப்படங்களை பிரமாண பத்திரமாக உரிய முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர் .
இதை அடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .