கார்த்திகை மாத சஷ்டியில் முருகனை வணங்கினால் நம் தோஷங்களையெல்லாம் பறந்தோடச் செய்வார். அதிலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் உடனே தோஷம் நீங்கி வரம் அமையும் என்பது நம்பிக்கை .
சஷ்டி என்பது முருகனுக்கு உரிய நாள். தை மாத பூசம், பங்குனி உத்திரம், வைகாசியின் விசாகம், ஆடியின் கிருத்திகை முதலானவையெல்லாம் முருகனுக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்தநாட்களில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.
செவ்வாய் தோஷம் நீங்கும் :
அதிலும் இந்த கார்த்திகை மாதம் என்பது அற்புதமான மாதம். கார்த்திகை என்பதே முருகப் பெருமானைக் குறிக்கும் மாதமாகும்.. கார்த்திகை மாதத்து சஷ்டி மிக உன்னதமான நல்லநாள். இந்த நாளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். அத்துடன் கேட்ட வரங்களைத் தந்திடுவார் முருகன்.
செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். முருகப்பெருமான் பூமிகாரகன். செவ்வாய் பகவானை வழிபடுவதும் முருகப்பெருமானை வழிபடுவதும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை வழிபடுவதும் மிகுந்த பலன்களை தந்தருளக்கூடியது. எனவே, முருகப்பெருமானை தரிசியுங்கள். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.
சஷ்டி விரதம் இருக்கும் முறை :
பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம் .
பலன்கள் :
பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அதுமட்டும் இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.
குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என கோரிக்கைகாளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார் என்பது ஐதீகம் .
விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. அத்துடன் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம் .