உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி நடைபெற்றது.
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக சார்பில், உதயநிதியின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கிடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட பணிகளை வழங்கி வருகிறார். முன்னதாக, உதயநிதிஸ்டாலின் தனது தந்தையும், திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து ஆசி பெற்றார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பேரறிஞர் வழியில் மாநில உரிமை காக்க போராடும் முதலமைச்சர்களில் முதல்வர், முத்தமிழறிஞர் வழியில் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றேன். திமுக தலைவர் அவர்களின் வழியில் மாநில-கழக வளர்ச்சிக்காக உழைப்போம்!” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.