திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..

by Editor News

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காத்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான், திருமால் மற்றும் பிரம்மனுக்கும் அக்னி வடிவமாக காட்சியளித்தார். இந்நாளிலேயே திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி அக்னி தலமான திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் . இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கார்த்தை தீபத் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கமான உற்சாகத்துடன் கார்த்திகை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார், திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் அதிகாலை கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை மாட வீதியில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவர். காத்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான டிச.5 அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும்.

பின்னர், தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் பக்தர்களின் வசதிக்காக 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2,432 சிறப்பு பேருந்துகள் , விழுப்புரம், வேலூர் மார்க்கமாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 59 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 12,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 500 சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Related Posts

Leave a Comment