ஒரு இடத்திற்கு புதிதாக பயணம் செய்பவர்கள் பேருந்தில் ஏறியதும் நடத்துனரிடம், தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார். அது மட்டுமல்லாமல் தனக்கு அருகே இருப்பவர்களிடமும் தான் இறங்கும் அந்த பேருந்து நிறுத்தம் வந்து விட்டதா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சில நேரங்களில் நடத்துனர் தனது வேலை மும்முரத்தில் அந்தப் பயணி கேட்டுக்கொண்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் சொல்லாமல் இருந்து விடுவார். அருகில் இருப்பவர்களும் அதுவரைக்கும் சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொன்னவர்களும் கூட ஏதோ யோசனையில் அவர்கள் மறந்து விடுவார்கள்.
இந்த சிக்கலை எல்லாம், இந்த தவிப்புகளை எல்லாம் தடுக்கவே அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் துவங்கப்படுகிறது . சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இதற்காக முதற்கட்டமாக புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பாளர் என்கிற ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது .
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாகவே பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒளிபரப்பப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.