இரண்டு பெயர் வேணும்.. பாஸ்போர்ட்ல இனி இந்த மாற்றம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UAE

by Editor News

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாஸ்போர்ட்டில், அவர்களின் முழு பெயரும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதிய விதி அமலுக்குவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளின் பாஸ்போர்ட் விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் கணிசமான பயணிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களைச் சேர்ந்த பலர் அங்கு அதிக அளவில் பணி நிமித்தமாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசு அந்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு புதிய விதி ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாஸ்போர்ட்டில், அவர்களின் முழு பெயரும் கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதாவது, First name எனப்படும் முதல் பெயருடன் last name or surname எனப்படும் துணைப்பெயர் அல்லது இரண்டாம் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நபரின் பெயர் நவீன் குமார் என்றால் முதல் பெயர் நவீன், துணை பெயர் குமார் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிட வேண்டும்.

ஆனால் ஒரு சில பேருக்கு ஒரே பெயர்தான் இருக்கும். உதாரணமாக முருகன் என்று பெயர் வைத்திருப்பவர்கள் இரண்டாவது அல்லது துணை பெயர் இல்லாமல் இனி பயணிக்க முடியாது. எனவே, தந்தையின் பெயரை இரண்டாவது பெயராகவோ அல்லது வேறு ஏதும் விதத்திலோ கட்டாயம் இரண்டாவது பெயரை குறிப்பிட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

அப்படி குறிப்பிடாத பாஸ்போர்ட் கொண்ட பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி இல்லை என ஐக்கிய அரபு அமீரக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இந்த விதியானது நவம்பர் 21ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து பலர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது வழக்கம் என்பதால் இந்த புதிய விதியை கவனத்தில் கொண்டு உடனடியாக பின்பற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment