கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து.. களமிறங்கும் நட்சத்திர வீரர்கள்.. களைகட்டப்போகும் பிபா !

by Editor News

சுவாரெஸ், ரொனால்டோ,நெய்மர் என நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றும் 4 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. ரொனால்டோவின் போர்சுகல், நெய்மரின் பிரேசில், லூயிஸ் சுவாரசின் உருகுவே என நட்சத்திர போட்டிகள் களைகட்டவுள்ளன.

கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்றும் 4 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து – கேமரூன் அணிகள் மோதுகின்றன. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன. 12 வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள ஸ்விஸ் முதல் போட்டியில் இதுவரை தோற்றதில்லை என்றவரலாற்றோடு களமிறங்குகிறது.

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் குரூப் H பிரிவில் இடம்பிடித்துள்ள உருகுவே – தென் கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லூயிஸ் சுவாரெஸ், அலான்ஷோ, ஆஸ்கர் போன்ற நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள உருகுவே 14 வது முறையாக களமிறங்குகிறது. கடைசியாக விளையாடிய 7 தொடர்களில் முதல் ஆட்டத்தில் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 11 வது முறையாக களமிறங்கும் ஆசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியா தொடர்ந்து 10 முறை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3வது ஆட்டத்தில் குரூப் H பிரிவில் இடம்பிடித்துள்ள ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி – கானா அணியை எதிர்கொள்கிறது. மேன்யு கிளப் அணியிலிருந்து வெளியேறிய தலைசிறந்த நட்சத்திர வீரர் ரொனால்டோவின் ஆட்டத்தை பார்க்க ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.

கடந்த 3 தொடர்களிலும் முதல் போட்டியில் வெற்றியை ருசிக்காத போர்ச்சுகல் இம்முறை கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் கானாவை 2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் 2-1 என வீழ்த்தியுள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெய்மரின் பிரேசில் அணி – செர்பியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள பிரேசில் நடப்பு தொடரின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. அத்துடன் அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் தகுதி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையுடனும் களமிறங்க காத்திருக்கிறது. இதற்கு முன் இரண்டு முறை இரு அணிகளும் உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இரண்டிலும் பிரேசிலே வெற்றி வாகை சூடியுள்ளது.

சுவாரெஸ், ரொனால்டோ,நெய்மர் என நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment