தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை வளிமண்டல மேலடுக்க சுழற்சியாக வலுவிழந்ததை அடுத்து தற்போது தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக இன்று காலை வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்ச்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, (24.11.2022) வட தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியாக 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.