தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்தவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் தேனிசைத் தென்றல் தேவாவும் ஒருவர். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற ஜாம்பவான்கள் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் தனது தனித்துவமான கானா பாடல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தேவா.
தேவாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 20-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதோடு நடிகைகள் மீனா, மாளவிகா மற்றும் நடிகர் ஜெய் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கச்சேரியில் தேவா இசையில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன பாடல்கள் அனைத்தும் பாடினர். தேவா நடத்தும் முதல் இசைக் கச்சேரி இது என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்த விழாவை காண குவிந்திருந்தனர். இந்த விழாவில் பேசும்போது நடிகர் ரஜினிகாந்த் தேவா பற்றி ஆச்சர்ய தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
அதாவது சிங்கப்பூரின் 6-வது அதிபராக இருந்தவர் எஸ்.ஆர்.நாதன். இவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இசையமைப்பாளர் தேவாவின் தீவிர ரசிகரான இவர், தான் இறக்கும் முன் தனது கடைசி ஆசை ஒன்றை கூறி உள்ளார். அது என்னவென்றால் தான் இறந்த பின்னர் தனது இறுதிச் சடங்கில் தேவா இசையில் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்கிற பாடலை ஒலிக்கச் செய்யுமாறு கூறி இருந்தாராம்.
அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது இறுதிச் சடங்கில் அந்த பாடல் ஒலிபரப்பப்பட்டது. அந்த சமயத்தில் அந்த பாடலை சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஊடகங்கள் அப்பாடலை மொழிபெயர்த்து ஒலிபரப்பியதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஊடகத்தில் கூட அந்த செய்தி வரவில்லை என ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கூறினார். இதையடுத்து சிங்கப்பூர் அதிபரின் இறுதிச்சடங்கில் தேவாவின் பாடல் ஒலித்தபோது எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.