வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அதிகளவிலான மழைப் பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை தான். இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக பழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் – புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 450 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையானது பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.