பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என்பதால் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது , மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது . மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர் நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு 75 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி தயார் நிலையில் இருக்கிறது. விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
அவர் மேலும், பயிர் காப்பீடு செய்ய 21. 11. 2022 கடைசி நாள் என்பதால் விடுபட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 20 சதவிகிதம் விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.