இன்று சோமவார பிரதோஷம் … பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் !

by Editor News

சோம வார பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த சிவனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவாலயங்களில் இன்று மாலையில் சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று கார்த்திகை மாதத்தின் சோமவார பிரதோஷம். நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான். நம் மனதில் குழப்பத்துக்கும் சந்திரன் காரணம். நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். ஆகவே மனக்குழப்பத்துடன் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை அளிக்கும். சோமவாரப்பிரதோசம் சோதனைகளை தீர்த்து மனக்குழப்பத்தை சரிச்செய்யும்.

இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். மேலும் நம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் விலகி திருமண விரைவில் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வேண்டியதை அள்ளி தருவார் சிவபெருமான் என்பதும் சோமவார பிரதோஷ தின வழிபாட்டின் சிறப்புகள்.

Related Posts

Leave a Comment